தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் சனிக்கிழமை (ஏப். 6) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏபிசி வீரபாகு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
தூத்துக்குடி வஉசி கல்லூரியும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்கள் சங்கமும் (துடிசியா) இணைந்து நடத்தும் இவ்வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை   காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முகாமை, துடிசியா தலைவர் கே. நேருபிரகாஷ் தொடங்கி வைக்கிறார்.

முகாமில், தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமில், வஉசி மற்றும் ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவர்,  மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த முகாம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர், மாணவிகளும் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
பேட்டியின்போது, துடிசியா தலைவர் கே. நேருபிரகாஷ், பொருளாளர் சந்திரமோகன், வஉசி கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சோரீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.