புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 27 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி மட்டும் இறந்து விட்டார். தொடர்ந்து 18 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது.

இந்த நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து மக்கள் தென்மாவட்டம் நோக்கி வரத்தொடங்கினர். அவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாமில் வைத்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் கொரோனா தொற்று உள்ளவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள். அதன்படி ஏற்கனவே 10 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கடந்த 13-ந்தேதி சென்னையில் இருந்து லாரி மூலம் வந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் நரம்பு பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.
இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 10 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.