தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை மறு நாள் காலை வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் நாளை (புதன்கிழமை) அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அன்றைய தினங்களில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேல் கூடுவதற்கும், வாள், கத்தி, கம்பு, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்திற்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்றால் முன்னதாகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.