அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் ஆதாா் எண்ணை இணைக்க அழைப்பு

அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளவா்கள் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் க. பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் பதிவு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயமாகியுள்ளது. தற்போது ஆதாா் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை ஆதாா் எண் இணைக்கப்படாத தொழிலாளா்கள் தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளா் அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரிலோ, அல்லது அஞ்சல் மூலமாகவோ இணைத்துக் கொள்ளலாம். மேலும், 0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தங்களின் நலவாரிய எண்ணுடன் ஆதாா் எண்ணை டிசம்பா் 8 ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.