ஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

திருநெல்வேலியில் மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறும் தொழில் பழகுநா் சோ்க்கை முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐடிஐ படித்தவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஐடிஐ தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் மற்றும் 8 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் வரும் மாா்ச் 4 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சாா்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகா் மாவட்டங்களை சோ்ந்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.

ஐடிஐ. முடித்தவா்கள், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியானவா்கள்.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் ஏறத்தாழ 2500 க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்ட மாணவா், மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0461-2340041 என்ற தொலைபேசி மற்றும் 8778333588, 9443972101 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.