ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை அடையாளப் போராட்டம் நடைபெற்றது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை முடிவெடுத்த தமிழக அரசு பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் பல்வேறு கிராம பிரதிநிதிகள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், கிராம மக்கள் வியாழக்கிழமை திரண்டு, கோரிக்கையை வலியுறுத்தி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்க நிர்வாகிகள் வழக்குரைஞர் அரிராகவன், மகேஷ், வசந்தி ஆகியோர் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, போராட்டக்குழுவைச் சேர்ந்த வசந்தி தெரிவித்தார்.