வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்-பொதுமக்கள் பாதிப்பு

வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, தூத்துக்குடியில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையைக் கண்டித்து இம்மாதம் 21ஆம் தேதி வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 4ஆவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. திங்கள்கிழமை (டிச. 24) மட்டுமே வங்கிகள் செயல்பட்டன. செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தூத்துக்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் உள்ளிட்ட பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் வணிகர்கள், பொதுமக்கள் பணபரிவர்த்தனை செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.