தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்து தூத்துக்குடியில் புதன்கிழமை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழில் தேர்வு எழுத விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வலியுறுத்தியும், கட்டண உயர்வை கண்டித்தும் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர், மாணவிகளை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.அந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடியில் வஉசி கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல், காமராஜ் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் சுரேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவு வாயில் முன் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் கல்லூரிக்குள் சென்றனர்.