தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மே 8இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (மே 8) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் து. நாகராஜன் வெளியிட்ட அறிக்கை: காமராஜ் கல்லூரியில் 2019- 2020ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு இளங்கலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. அரசாணை மற்றும் மாணவர் சேர்க்கைக் குழு முடிவின்படி புதன்கிழமை (மே 8) பி.காம் மற்றும் பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும், வியாழக்கிழமை (மே 9) பி.எஸ்.சி. பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பம் செய்துள்ள மாணவர், மாணவிகளுக்கு அவர்கள் பெற்ற கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டுத் துறையில் சிறப்பு பெற்றவர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். ஆகியவற்றுக்கான முன்னுரிமைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை குறித்த மேலும் விவரங்களுக்கு 9489021988 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், 0461-2375988 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.