ஓட்டுநர் உரிமம் தொடர்பான கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் வாகனங்களுக்கான பதிவுக்கட்டணம் மற்றும் வரி இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் அதாவது பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல், தவணைக் கொள்முதல் மற்றும் தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1.3.2017முதல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது விண்ணப்பதாரர் அதற்குரிய கட்டணத்தை மட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரடியாக சென்று செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளுக்கான (பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிம முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல்) கட்டணம் முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து செயல்படுத்தும் வசதி தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர்கள் நேரடியாக https://parivahan.gov.in/parivahan/ என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்தி பயன் பெறலாம்.  அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மனுவை பூர்த்தி செய்த பிறகு அதற்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.
வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு மூலமாக விண்ணப்பத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலம் ரசீதை உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம்.
தொகையை செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டை அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும்  மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று தகுந்த தேர்வில் (டெஸ்ட்) கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.