வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பித்துக் கொள்ளத் தவறியவர்கள் மீண்டும் பதிவைப் புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி விடுபட்ட பதிவை ஜனவரி 24 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் 24 ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமாக பதிவைப் புதுப்பிக்க விரும்புவோர்  இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.