சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (அக். 30) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


2018-2019ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களான நுண்ணீர் பாசனத் திட்டம், கூட்டுப்பண்ணைத் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் மற்றும் பல திட்டங்களின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருவாய்த் துறையின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், வருவாய்த் துறையின் மூலம் 2.5 ஏக்கர் நிலமுடைய விவசாயிகளுக்கு குறு விவசாயிகள் சான்றிதழும், 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலமுடைய விவசாயிகளுக்கு சிறு விவசாயிகள் சான்றிதழும் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள், வேண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை திட்டங்களின்கீழ் விரைவில் பயன்பெறும் வகையிலும் சிறு, குறு விவசாயிகள் சான்றுகள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் செவ்வாய்க்கிழமை (அக். 30) நேரடியாக வழங்கப்பட உள்ளது.

எனவே, அனைத்து விவசாயிகளும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் பகுதிக்குள்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்து சிறு, குறு விவசாயிகள் சான்றிதழை அன்றைய தினமே பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.