கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் நடவடிக்கை: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவைப்படும் உரத் தேவையை கணக்கிட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான உர இருப்பு வைத்திட வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 750 மெட்ரிக் டன் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1422 மெட்ரிக் டன் யூரியா இருப்பு உள்ளது.

உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி தங்களிடம் உள்ள உர இருப்பு மற்றும் விற்பனை விலையை விற்பனை நிலையத்திற்கு முன்பாக விளம்பரப் பலகையில் எழுதி வைக்க வேண்டும். உரங்களை விற்பனை முனைய கருவி மூலமாக பட்டியலிட்டு அந்தந்த உரத்துக்கான கட்டுப்பாட்டு விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தெரியவந்தால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனையை கண்காணிக்க அவ்வப்போது வேளாண்துறை அதிகாரிகளைக் கொண்டு பறக்கும் படை அமைத்து விதிகளை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகள் தாங்கள் வாங்கும் உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை விலைக்கு மேலாக எந்த ஒரு உரக் கடையில் கோரினாலும் அதனை உடன் வேளாண் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
தற்போது, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பருவத்திற்குத் தேவையான ரசாயன உரங்கள் இருப்பு வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.