தூத்துக்குடியில் வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி பொதுமக்கள் முற்றுகை-பரபரப்பு

தூத்துக்குடியில் வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி நடந்ததை தொடர்ந்து அந்த வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

தூத்துக்குடி மட்டக்கடையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானவர்கள் தங்கநகை அடகு வைத்து உள்ளனர். இந்த நகைகள் ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒருமுறை சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்தவாரம் அதிகாரிகள் நகைகளை பரிசோதனை செய்தனர். அப்போது சில நகைகள் காணாமல் போய் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இதனால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் 22 பேரின் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் போலி நகை விவகாரம் பற்றிய தகவல் பொதுமக்களிடையே பரவ தொடங்கியது. இதனால் அந்த வங்கியில் நகை அடமானம் வைத்தவர்கள் தங்கள் நகையின் நிலையை அறிந்து கொள்வதற்காக நேற்று வங்கி முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகையிட்ட வங்கி வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வங்கி கோட்ட மேலாளர் முகமது இஸ்மாயில், வங்கி நகை மதிப்பீட்டாளர் தூத்துக்குடியை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் சிலர் மீது வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்.
இதுதொடர்பாக வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இந்த வங்கியில் சுமார் 6 ஆயிரத்து 300 பேர் நகை அடமானம் வைத்து உள்ளனர். மட்டக்கடை கிளை நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரம் மீது சந்தேகம் அடைந்து நகைகளை சோதனை செய்தோம்.
சோதனையில் பொதுமக்களின் நகைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று வங்கி உறுதி செய்கிறது. நகை மதிப்பீட்டாளர் தனது உறவினர்கள், கூட்டாளிகள் பெயரிலேயே மோசடி செய்து உள்ளார். மற்ற பொதுமக்களின் நகைகளுக்கோ, உடைமைகளுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.
இதுதொடர்பாக போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.