1-ந் தேதி முதல் கோவில்பட்டியில் பஸ் போக்குவரத்து மாற்றம்

கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலையில் நடந்தது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், நகரசபை ஆணையாளர் அட்சயா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ, மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

கோவில்பட்டி நகரில் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை, விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். மேற்கண்ட ஊர்களுக்கு பிற ஊர்களில் இருந்து கோவில்பட்டி வழியாக வந்து செல்லும் பஸ்கள், கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

கோவில்பட்டியில் இருந்து மதுரை, நெல்லைக்கு செல்லும் பஸ்கள், கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அண்ணா பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். கோவில்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருவேங்கடம், கழுகுமலை, சங்கரன்கோவில், சிவகாசி போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும்.

இரவு 8 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையிலும் கோவில்பட்டி வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கோவில்பட்டி வரையிலும் வருகின்ற பஸ்கள் அனைத்தும், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். தொலைதூர பஸ்கள் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையத்துக்கு இணைப்பு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்படும். இரவு நேரங்களில் கூடுதல் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியில் இருக்க வேண்டும்.

மதுரையில் இருந்து கோவில்பட்டி வரும் பஸ்கள், அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட வேண்டும். பின்னர் அங்கிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு, கூடுதல் பஸ் நிலையம் செல்ல வேண்டும். அங்கு சிறிதுநேரம் காத்திருந்த பின்னர் அண்ணா பஸ் நிலையம் வராமல் நேரடியாக மதுரைக்கு செல்ல வேண்டும்.

இதேபோன்று நெல்லையில் இருந்து கோவில்பட்டி வரும் பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட வேண்டும். பின்னர் அங்கிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு, கூடுதல் பஸ் நிலையம் செல்ல வேண்டும். அங்கு சிறிதுநேரம் காத்திருந்த பின்னர் அண்ணா பஸ் நிலையம் வராமல் நேரடியாக நெல்லைக்கு செல்ல வேண்டும்.

ஆம்னி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, ஜமீன் தேவர்குளம், இளையரசனேந்தல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மினி பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கூடுதல் பஸ் நிலையம் வழியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும்.

மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.