இலவச கறவைப்பசுக்கள் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச கறவைப் பசுக்கள் வழங்க பெண் பயனாளிகள் நவ. 16ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு திட்டமான இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தில் 2018-2019ஆம் ஆண்டுக்கு டிசம்பர் 2018 மற்றும் ஜனவரி 2019 மாதத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்தில் கொடியன்குளம், மீனாட்சிபுரம், தெற்குகல்மேடு, அருண்குளம், தலைக்கட்டுபுரம் ஆகிய 5 கிராமங்களில் பயனாளிகள் தேர்வு செய்திடும் வகையில் நவ. 16ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே, இலவச கறவைப் பசு பெற்றிட விரும்பும் பெண் பயனாளிகள் நவ. 16ஆம் தேதி அந்தந்த ஊராட்சி  சிறப்பு கிராம சபைகளில் கலந்துகொண்டு உரிய விண்ணப்பங்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து நவ. 23ஆம் நடைபெறும் சிறப்பு கிராம சபையில் தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.