தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைப் பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காக்களில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மற்றும் புதிதாக பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பூங்காக்களில் நடைபாதை, மின் விளக்கு, புல்தரை இருக்கை வசதி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு தரத்துக்கு இணையாக திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முத்துநகர் கடற்கரைப் பூங்கா மாவட்ட நலக் குழுவால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் மாநகராட்சியால் பராமரிப்பு பணிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும், முத்துநகர் கடற்கரைப் பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், மாநகராட்சி தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 
எனவே, பொதுமக்கள் முத்துநகர் கடற்கரைப் பூங்காவில் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் துப்புரவுப் பணிகள் தொடர்பாக 7397731065 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.