சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 729 கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 729 சத்துணவு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும், பணிக்கொடை மற்றும் உணவு மானிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25–ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 2–வது நாளாக பாளையங்கோட்டை ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாக்கியசீலி கோரிக்கையை விளக்கி பேசினார். தனியார் கல்லூரி அலுவலர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டதால், பாளையங்கோட்டை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், முத்து மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 215 பேரை கைது செய்தனர்.

கயத்தாறு

இதே போன்று நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சங்க வட்டார தலைவர் பாலையா, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் வளர்மதி உள்பட திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 239 பெண்கள் உள்பட 257 பேரை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சத்துணவு வழங்கல்

சத்துணவு ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவ–மாணவிகளுக்கு தடையின்றி சத்துணவு வழங்கும் வகையில், கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் யூனியன் ஆணையாளர் செல்வகுமார் தலைமையில் ஊழியர்கள் சத்துணவு தயார் செய்து, கயத்தாறு யூனியனில் உள்ள 135 பள்ளிக்கூடங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

சத்துணவு ஊழியர்களின் போராட்டம் நிறைவு பெறும் வரையிலும், மாணவ–மாணவிகளுக்கு தடையின்றி சத்துணவு வழங்கப்படும் என்று யூனியன் ஆணையாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பிருந்து சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து, பகத்சிங் பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 122 பெண்கள் உள்பட 129 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் இருந்து சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து, மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய தலைவர் அந்தோணி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 59 பெண்கள் உள்பட 65 பேரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 729 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

இது தவிர விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.