தூத்துக்குடி தொகுதியில் போலீசார் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் பணிக்காக சுமார் 9 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதே போன்று 2 ஆயிரத்து 221 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பணியாளர்கள் மற்றும் போலீசார் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் ஓட்டு மற்றும் தேர்தல் பணி சான்று வழங்கப்படுகிறது. தேர்தல் பணி சான்று பெறும் அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் ஓட்டு போடலாம். மற்றவர்கள் தபால் ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் நேற்று தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தூத்துக்குடி தொகுதியில் 484 தபால் ஓட்டுக்கான வாக்குப்பதிவு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று காலை தொடங்கியது. போலீஸ் தேர்தல் பார்வையாளர் சீனிவாசலு முன்னிலை வகித்தார். முதலில் தபால் ஓட்டு பெட்டி வேட்பாளர்களின் முகவர்கள் முன்பு திறந்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெட்டி பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு போலீசாருக்கு வாக்காளர் பட்டியல் விவரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு தபால் ஓட்டுக்கள் வழங்கப்பட்டன. முதலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தனது ஓட்டை தபால் ஓட்டாக பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் வரிசையாக ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாத்திக்குளம் தொகுதியில் 317 போலீசாருக்கான வாக்குப்பதிவு கோவில்பட்டி சி.கே.டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செந்தூர் தொகுதியில் உள்ள 225 பேருக்கான வாக்குப்பதிவு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள 318 பேருக்கு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியிலும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள 591 பேருக்கு புதியம்புத்தூர் ஜான்திபாப்திஸ்ட் மேல்நிலைப்பள்ளியிலும், கோவில்பட்டி தொகுதியில் உள்ள 286 பேருக்கு கோவில்பட்டி நாடார் பள்ளியிலும் என மொத்தம் 2 ஆயிரத்து 221 பேருக்கான வாக்குப்பதிவு நடந்தது.
இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.