தூத்துக்குடியில் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செப். 28 இல் தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் செப். 28 ஆம் தேதி முதல் அகற்றப்படும் என்றார் மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளான பாளையங்கோட்டை சாலையில் இந்திய உணவுக் கழக குடோன் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை உள்ள பகுதிகளான 3 ஆவது மைல், மேல பெரிய காட்டன் சாலை மற்றும் பாலவிநாயகர் கோயில் சாலை,  எட்டயபுரம் சாலையில் சாமி பெட்ரோல் விற்பனை நிலையம் முதல் ஜெயராஜ் சாலை மற்றும் அருள்ராஜ் மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில்  உள்ள சாலையோர நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள்,  அனுமதியற்ற தற்காலிக விளம்பர பலகைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகற்றப்பட்டது.  தற்போது அந்தப் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.  எனவே, சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் நடவடிக்கைகள் செப். 28 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நெடுஞ்சாலை துறை,  காவல் துறை மற்றும் வருவாய் துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது.
 எனவே, சாலையோர ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் இடத்திற்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் நிலையில் மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்படுவதுடன், காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.