தூத்துக்குடியில் நவ. 1இல் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடியில் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நவ. 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், 2018-2019ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கடற்கரை வாலிபால், கடற்கரை கால்பந்து மற்றும் கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டிகள் நவ. 1ஆம் தேதி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலை 7 மணி முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.

ஒரு வாலிபால் அணியில் 2 நபர்களும், கால்பந்து அணியில் 5 நபர்களும், கபடி அணியில் 6 நபர்களும் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள், அக். 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு முன் தங்கள் அணி குறித்த விவரத்தை தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்யவேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

முன்பதிவு செய்த அணிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படுவதால் வீரர்கள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தகத்துடன் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.