தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடனுதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படுவதாகவும், இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்புற மக்கள் புதிதாக தொழில் தொடங்க பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருக்க திட்டத்தின் (யு.ஒய்.இ.ஜி.பி.) கீழ் உற்பத்தி சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் தொடங்க முறையே ரூ.10 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் திட்ட மதிப்பில் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் 8–ம் வகுப்பு தேர்ச்சியும் 18 வயது முதல் 45 வயது வரையும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.1.25 லட்சம்) கடன் உதவி பெற வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்குஷ்ஷ்ஷ்.msmeoneline.in.gov.in/uyegp என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினரும், 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சிறப்பு பிரிவினரும் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க வங்கி கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கூடிய (அதிகபட்சம் ரூ.30 லட்சம்) வங்கி கடனுதவி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு www.msmeoneline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் தொடங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும். உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவு பயனாளிகள் சொந்த முதலீடாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர்கள் 5 சதவீதம் பங்களிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு www.kviconline.gov.in/Dic என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மேற்படி திட்டங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, அந்தந்த இணையதளங்களில் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், தூத்துக்குடி அல்லது 0461 2340152, 0461 2340153 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.