தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் திங்கள்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை (அக். 9) இரவு வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி, ஒடிஸா கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான தூறல் இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 25 மி.மீட்டரும், கழுகுமலை பகுதியில் 17 மி.மீ, கீழஅரசடி பகுதியில் 12 மி.மீ. மழையும் பதிவானது.
இதற்கிடையே, கடல் பகுதியில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், செவ்வாய்க்கிழமை (அக். 9) இரவு வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், யாரேனும் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக கரைதிரும்பும்படியும் அதிகாரிகள் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு புயல் எச்சரிக்கை அளிக்கும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் திங்கள்கிழமை மாலை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மழை தீவிரமடையும் என்ற நிலை உள்ளதால், மாவட்டத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.