தூத்துக்குடியில் ஒரே நாளில் 300 மாணவர்கள் ரத்த தானம்

தூத்துக்குடியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 300 மாணவர், மாணவிகள்  ரத்த தானம் செய்தனர்.


டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகளவு பரவி வருவதால் நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் ஏற்ற வேண்டிய தேவையுள்ளது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில், “உதிரம் 18” எனும் பெயரில் ரத்த தான முகாம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
முகாமை,  அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் வசந்தி தொடங்கிவைத்தார். துணை முதல்வர் ராஜவேல் முருகன், கல்வி அலுவலர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்  சபரிராஜா, ரத்த வங்கி அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, தூத்துக்குடி வஉசி கல்லூரி, காமராஜ் கல்லூரி, இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி, சாயர்புரம் போப்ஸ் கல்லூரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் தேசிய மாணவர் படை மாணவர்களும் ரத்த தானம் செய்தனர். மொத்தம் 300 மாணவர், மாணவிகளிடம் இருந்து 300 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த ரத்தம் பயன்படுத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.