பராமரிப்பு உதவித் தொகை: மாற்றுத் திறனாளிகளின் சான்றுகளை ஜூலை 31-க்குள் ஒப்படைக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பு உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளின் சான்றுகளை இம்மாதம் 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதம் ரூ. 1,500 பெறும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இனிவரும் காலங்களில் இணையதள சேவை வழியாக  மாத பராமரிப்பு உதவித்தொகை பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு வங்கி மூலம் வழங்கப்படவுள்ளது. எனவே, தற்போது வரை ஆதார் எண்ணை தாக்கல் செய்யாத பயனாளிகள் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்), கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் வாழ்நாள் சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (அசல் மற்றும் நகல்), உதவித்தொகை பெற்று வரும் வங்கிக் கணக்கின் புத்தகம் (அசல் மற்றும் நகல்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2 (பாதுகாவலர் மற்றும் மாற்றுத் திறனாளி) ஆகிய ஆவணங்களுடன் "மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி' என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பாதுகாவலர் மட்டும் ஜூலை 31-க்குள் நேரில் தாக்கல் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி நேரில் வரத்தேவையில்லை என்றார்