கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (பிப். 22) தொடங்குவதாக இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:


கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு வெள்ளிக்கிழமை (பிப்.22)  முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை தூத்துக்குடி,  கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் யாரும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம்.  நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.