தாமிரவருணி புஷ்கர விழா: 29 படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு

தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை(வியாழக்கிழமை) முதல் 23-10-18 வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட்டத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகில், ஆழ்வார்திருநகரி திருசங்கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வரர், பட்சிராஜன், நாயக்கர் பகுதி, பிள்ளையார்கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப்பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்களகுறிச்சி, சேர்மன் அருணாசலசுவாமி கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங்கலத்தில் 2 இடங்கள் ஆக மொத்தம் 29 இடங்களில் உள்ள படித்துறைகளில் பக்தர்கள் நீராடலாம்.

விழாவையொட்டி 3 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி தாமிரபரணி ஆற்றில் புனித நீராடலாம்.

மேலும் புனித நீராடும் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி, பாதுகாப்பான முறையில் நீராடுவதற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.