குரூப்-2 தேர்வு – தூத்துக்குடி மாவட்டத்தில் 11,752 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தேர்வை 11 ஆயிரத்து 752 பேர் எழுதினர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்- 2 பதவிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய 4 வட்டங்களில் 57 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 15,621 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், 11 ஆயிரத்து 752 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3869 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தூத்துக்குடியில் 27 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 7,636 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,735 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஸ்ரீவைகுண்டத்தில் 3 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 784 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 606 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
கோவில்பட்டியில் 18 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 4,917 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,718 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். திருச்செந்தூரில் 9 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 2,252 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,693 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். கோவில்பட்டியில் தேர்வு மையங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலராக நியமனம் செய்யப்பட்ட சண்முகசுந்தரம் முன்னிலையில், அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், 18  மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன் ஆகியோர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அனைத்து மையங்களிலும் தேர்வு விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 வட்டங்களிலும் வட்டாட்சியரின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ஆட்சியர் நிலையில் 7 பறக்கும் படை குழுக்களும், துணை வட்டாட்சியர் தலைமையில் 10 குழுக்களும் நியமிக்கப்பட்டு, தேர்வு மையங்களை கண்காணித்தனர். தேர்வு மையங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.