வஉசி சந்தையை இடிக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அடுக்குமாடி மார்க்கெட் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பலர் கூட்டாக வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் வியாபாரிகள் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், தற்போது நல்ல முறையில் இயங்கி வரும் வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து விட்டு தனியார் பங்களிப்புடன் புதிதாக அடுக்குமாடி மார்க்கெட் கட்ட உள்ளதாக தெரிகிறது. தற்போது அதற்கு எந்த அவசியமும் இல்லை. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன. அந்த கடைகளை நம்பி 8 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.

மாநகராட்சி சார்பில் அடுக்குமாடி மார்க்கெட் கட்ட வேண்டும் என்றால் அதனை, நகரில் வேறு பொறுத்தமான இடத்தில் கட்டலாம். இங்கு கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநகராட்சி நிர்வாகம், இந்த மார்க்கெட்டை இடிக்க நியாயத்துக்கு முரணாக செயல்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி சார்பில் புதிய கட்டிடம் கட்ட நல்ல நிலையில் இருக்கும் இந்த மார்க்கெட்டை இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறிஇருந்தனர்.