தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதில் புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 7.10.2018, மற்றும் 14.10.2018 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்களும் நடக்கிறது. இது குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஊர்வலத்தில் பங்கு பெறும் மாணவ-மாணவிகள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.