தூத்துக்குடி மாநகராட்சியில் பெண் ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிய விரும்பும் பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகாரட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் குற்றவியல் நடவடிக்கையில்லா நற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தூத்துக்குடி எல்லையில் குடியிருக்க வேண்டும்.  குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு. வாகனம் இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணியில் அமர்த்தப்படும் பெண் ஓட்டுநர்களின் பணியானது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. எந்தவித முகாந்திரமுமின்றி தேவையில்லை எனில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அலுவலக வேலை நாள்களில் மைய அலுவலக பொது சுகாதாரப் பிரிவை அணுகி தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம்,  113 பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி 2."  என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.