நாட்டுக்கோழி அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  நாட்டுக் கோழிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு 500 பயனாளிகள் வீதம் 12 ஊராட்சி ஒன்றியத்துக்கு  6ஆயிரம்  பெண் பயனாளிகளுக்கு அசில் இன நாட்டுக்கோழிகள் நடப்பு ஆண்டில் வழங்கப்பட உள்ளது. 

மேலும் பேரூராட்சி பகுதியில் 1,653 பயனாளிகள் என மொத்தம் 7,653 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்பட உள்ளது.

எனவே, அந்தந்தப் பகுதி கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரமாக வசிக்கும் பெண் பயனாளிகள் நாட்டுக்கோழிகள் வளர்க்க விருப்பம் இருந்தால் கால்நடை மருத்துவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் ஆக.31 ஆம் தேதிக்குள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இந்தத் திட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  மேலும், 30 சதவீத பயனாளிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரம் தெரிந்து கொள்ள விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.