வேலைக்கு செல்லும் பெண்கள் அம்மா ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேலைக்கு செல்லும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள், அம்மா ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

வேலைக்கு செல்லும் மகளிர் எளிதாக சென்றுவர வசதியாக 50 சதவீதம் மானியத்துடன் கூடிய அம்மா ஸ்கூட்டர் வாகன திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டு ஸ்கூட்டர் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய விரும்பும் ஓட்டுனர் உரிமம் பெற்ற வேலைக்குச் செல்லும் தகுதியுடையவர், ஊராட்சி பகுதிகளில் உள்ள மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திலும், பேரூராட்சி பகுதியில் உள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட பேரூராட்சி அலுவலகத்திலும், நகராட்சி பகுதியில் உள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மனுதாரர்கள் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பித்து மனுக்கள் பெற்று கொள்ளலாம்.

இதற்கு, நிறுவனப் பணியில் உள்ள மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழிநடத்துனர்கள், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள், 18 முதல் 40 வயது வரையுள்ள வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மனுவுடன் பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், உரிய அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் நகல் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னரே மானியத் தொகை வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். அத்துடன் வேலை வழங்கும் அலுவலரால் அல்லது நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், நிறுவனத் தலைவர் அல்லது சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை நகல், கல்வி சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.