தூத்துக்குடியில் மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வருமான வரி துறை, கலால் துறை ஆய்வாளர்கள், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 500 காலி பணியிடங்களுக்கு (SSC – CGL Tier-I) தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான எழுத்து தேர்வு 14.07.2023 முதல் 27.07.2023 வரை நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. விண்ணப்பக்கட்டணம் ரூ.100 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவு பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசிநாள் 03.05.2023 ஆகும். தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
இந்த தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.