குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை: அமைச்சர் விளக்கம்

தமிழக அரசின் குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை குறித்து அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடைவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், குடும்பத் தலைவிக்கான ரூ 1000 உரிமை தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் பெண்கள் பயனடைய முடியாது. ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைய வாய்ப்புள்ளது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களே உள்ளதால் இந்த திட்டத்திற்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உரிமைத் தொகை மற்ற திட்டங்களை போல வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படும். இந்த 1000 ரூபாய் மாதந்தோறும் யாருக்கு கிடைத்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்குமோ அந்த நபர்களுக்கெல்லாம் இந்த உதவித் தொகை கிடைக்கும் என கீதாஜீவன் தெரிவித்தார்.