தூத்துக்குடியில் சாலையில் கிடந்த ரூ.5 லட்சம் பணம்

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே சாலையில் அனாதையாக கிடந்த ரூ.5 லட்சம் பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே சாலையில் கடந்த 17-ந் தேதி இரவு ஒரு பை கிடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கடைக்காரர் அந்த பையை பார்த்தார். உடனடியாக அந்த பையை எடுத்து பார்த்து உள்ளார். அந்த பையில் பல்வேறு உடைகள் இருந்து உள்ளன. அதன் அடிப்பகுதியில் ஒரு மஞ்சள்நிற பை இருந்து உள்ளது. அதனை எடுத்து பார்த்த போது, அந்த பையில் ரூபாய் நோட்டுக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. மறுநாள் காலையில் அவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் பணத்துடன் பையை ஒப்படைத்தார்.

தொடர்ந்து போலீசார் அந்த பையில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்தனர். அதில் மொத்தம் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. இதுதொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் பணப்பையை ஒப்படைத்தனர். பின்னர் தூத்துக்குடி தாசில்தார் வசம் பணப்பையை நேற்று ஒப்படைத்தனர். மேலும் இந்த பணப்பையை தவறவிட்டவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை தவறவிட்டவர்கள் மீண்டும் பணத்தை பெற மத்தியபாகம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.