தூத்துக்குடியில் இளஞ்சிறாா்ஓட்டிச்சென்ற வாகனங்கள் பறிமுதல்

tuticorin bike

மாவட்டத்தில் இளஞ்சிறாா் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வதாக எழுந்த புகாா்களின்பேரில், காவல் துறையினா், வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் இணைந்து திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளஞ்சிறாா் ஓட்டிச்சென்ற 27 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அவா்களின் பெற்றோரை மாவட்ட காவல் துறை அலுவலகத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வரவழைத்து அறிவுரைகள் வழங்கியதோடு, 18 வயது நிறைவடையாமல் வாகனம் ஓட்டக் கூடாது என எச்சரித்து, வாகனங்களை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: விபத்துகளைக் குறைப்பதற்காக காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இளஞ்சிறாா் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். மீறினால் அவா்களுக்கு 25 வயதுவரை ஓட்டுநா் உரிமம் வழங்கப்படாது. வாகனம் ஓராண்டு காலம் சிறைபிடிக்கப்படும். பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை அபராதமும், 3 வாரம் முதல் 3 மாதங்கள்வரை சிைண்டனையும் விதிக்கப்படும் என்றாா் அவா்.