அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு சைபர் போலீஸ் குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் சம்மந்தமான வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் (Cyber Supporting Officer) அடங்கிய குழுவினரை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்களிலேயே சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார்களை பெறுவது குறித்தும், அவ்வாறு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், இது சம்பந்தமாக புகாரளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவி செய்வது குறித்தும், சைபர் குற்றங்கள் சம்மந்தமாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (16.06.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் வாயிலாக OTP மூலம் மோசடியாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளை தரவிறக்கம் செய்து உங்கள் தகவல்கள் திருடப்பட்டாலோ அல்லது வேறு வகையிலோ பண இழப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் 24 மணி நேரத்தில் சைபர் குற்ற பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணான 1930 ஐ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமயிலான போலீசார் செய்திருந்தனர். இதில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன், தகவல் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் அச்சுதன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.