தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகக் கட்டுபாட்டின் கீழ், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக கோவில்பட்டியில் ஒன் ஸ்டாப் செண்டர் (ஒருங்கிணைந்த சேவை மையம்) செயல்பட உள்ளது.
அதில் சுழற்சி முறையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். இதில் மைய நிர்வாகி பணிக்கு (ஒரு பணியிடம்) விண்ணப்பம் செய்பவர்கள் சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூத்த ஆலோசகர் பணிக்கு (ஒரு பணியிடம்) விண்ணப்பம் செய்பவர்கள் சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் அல்லது உளவியல், சமூகவியலில் முதுநிலைப் பட்டம் இருக்க வேண்டும்.
வழக்குப் பணியாளர்கள் பணிக்கு (6 பணியிடம்) விண்ணப்பம் செய்பவர்கள் சமூகப்பணி அல்லது உளவியல் அல்லது சமூகவியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு (ஒரு பணியிடம்) கணினி அறிவியலில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாதுகாவலர்கள் பணிக்கு (2 பணியிடம்) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு உதவியாளர்கள் பணிக்கு (2 பணியிடம்) 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமூகநல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04612325606 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துஉள்ளார்.