எஸ் ஐ ஆர் படிவங்களை நிரப்புவதற்காக சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்காகவும், திரும்ப பெறுவதற்காகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம்-2026 ஆனது 01-01-2026 ஐ தகுதிநாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணி 04-11-2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-11-2025 மாலை 4 மணியளவில் 70 சதவிகிதம் கணக்கெடுப்பு படிவங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

இப்பணியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1627 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 166 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 15 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் செய்வதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அன்றி பிற நபர்கள் மூலம் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகம் செய்யகூடாது எனவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்காகவும், திரும்ப பெறுவதற்காகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வரும் 15-11-2025 (சனிக்கிழமை) மற்றும் 22-11-2025 (சனிக் கிழமை) ஆகிய தினங்களில் இரு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், இணையவழியாகவும், வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை பதிவேற்றும் வசதி உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் களப்பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர்கள் உரிய ஒத்துழைப்பு நல்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *