தூத்துக்குடியில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடியில் வருகிற 11ஆம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 11.08.2025 திங்கட்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெறவிருக்கிறது. 

இச்சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐ-யில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) மற்றும் பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் என அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் தக்க ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7700/- முதல் ரூ.10,000/- வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன்படி, இந்நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் நல் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *