வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  வருகிற 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர்  இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2025 பணியானது 29.10.2024 முதல் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 71.56 சதவீதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்திடவும் மனுக்கள் பெற்றுவதற்கும் வருகிற 16, 17, 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும விண்ணப்பங்களை அளிக்கலாம். 01.01.2025 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க படிவம்-6, பெயரை நீக்கம் செய்ய படிவம்-7, ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட மற்றும் வேறு சட்டமன்ற தொகுதியில் உள்ள பதிவை தற்சமயம் வசிக்கும் முகவரிக்கு மாற்றம் செய்யவும் படிவம்-8 அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க படிவம்-6 பி அளிக்க வேண்டும். மேலும் www.voters.eci.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்ற செல்போன் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை மற்றும் களஆய்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு(2025) ஜனவரி மாதம் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவுஅலுவலர் மற்றும் உதவிவாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசிஎண். 1950-ஐ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.