தூத்துக்குடியில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அதிக இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 மற்றும் குறைவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1000 ஆகியவை வழங்கும் பணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவரவர்கள் வீட்டுக்கே சென்று நியாயவிலைக்கடை விற்பனையாளர்களால் டோக்கன் வழங்கும் பணி 26-12-2023 முதல் ஆரம்பிக்கப்படுகிறது. 29-12-2023 முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த நியாயவிலைக்கடைகளில் சென்று குடும்ப அட்டைதாரர்கள் வெள்ள நிவாரண நிதியினைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கு நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது. வெள்ளம் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.