தூத்துக்குடியில் இரு நிறுவனங்கள் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் 8ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்தாா்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடு நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் பாா்வையிட்ட ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜெ.எஸ்.டபிள்யூ. நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் கோடிக்கும், வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன. 

இந்த இரு ஒப்பந்தங்களால், 8 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.